9/19/2010

இணுவில் கந்தசுவாமி கோவில்



-

இலங்கையின் வடபுலம் பண்டைத் தமிழரின் பண்பாட்டுக்கு ஓர் உறைவிடம். இங்குள்ளவர்கள் பழைமையைப் பேணுவதில் மிகுந்த ஈடுபாடுடையவர்கள். இங்கு பழம்தமிழரின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் ஆழமாக வேரூன்றியுள்ளன.

யாழ்ப்பாணப் பழம்பதிகளுள் ஒன்றான இணுவில், சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு முதன்மை அளித்து வருவது யாவரும் அறிந்த உண்மையாகும். 'இணையிலி' என்று பழங்காலத்தில் அறியப்பட்ட பெயர் காலப்போக்கில் மருவி இணுவில் என வழங்கப்படுகிறது.

சைவ பாரம்பரியங்களில் இறுக்கமான பற்றுடைய இவ்வூரின் பட்டித் தொட்டியெல்லாம் இறைவழிப்பாடுகள் நடாத்தப்பட்டன. இறைவனின் திருவுருவை கோவிலென்று கும்பிடும் பழக்கம் இங்கு நீண்ட காலமாக உண்டு.

இணுவிலின் கிழக்கெல்லையிலுள்ள 'காரைக்கால் சிவன் கோவில்'வரை ஒரு வரிசையில் வைத்துப் பார்க்கும் பொழுது, எட்டுக் கோவில்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டன.

இவற்றுள் 'இணுவில் பெரிய கோவில்' என்பது இணுவில் கந்தசுவாமி கோவிலைக் குறிக்கும். இங்கு கோவில் கொண்டுள்ள முருகனை 'நொச்சியம் பதியான், காஞ்சியம் பதியான், கல்யாண வேலவர்' எனப் பல பெயர்களாற் சுட்டி அழைத்து வழிபடுபவர். இப்பெயர்கள் ஒவ்வொன்றுக்குமான பெயர்க்காரணமும் உண்டு.

இக்கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டதுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. சங்குவேலி வயற்பரப்பில் இருந்து வருடா வருடம் இக்கோவிலுக்குத் தானமாக வழங்கப்படும் நெல்லில் இருந்து அரசகேசரி காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்ச்சங்கத்துடன் இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது தெளிவாகிறது.

இவ்வூரின் வரலாறாக யாழ்ப்பாண வைபவமாலையில் செங்கரும்பும், செந்நெல்லும், கமுகும் தழைத்தோங்கும் இணுவிலில் மேழிக்கொடியுடையவனும் திரண்ட தோள்களையும் விரிந்த மார்பினையும் உடையவனும், குவளை மலர் மாலையை அணிந்த திருக்கோவிலூர் பேராயிரமுடையோன் முதலி ஆட்சித்தலைவனாக விளங்கினான் எனக்கூறப்படுகிறது.

இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1365 என முதலியார் செ.இராசநாயகம் அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் கூறியுள்ளார். அவன் மரபில் வந்த கனகராச முதலி காலத்து ஆலயமாக இவ்வாலயம் கருதப்படுவதுடன் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டு கால வரலாற்றை இக்கோவில் கொண்டுள்ளது.

மயிலங்காடு தொடக்கம் ஆனைக்கோட்டை வரை எல்லைகளாக விரிந்திருந்த 'இணையிலி' என்று அழைக்கப்பட்ட இணுவில் கிராமத்தில் முதலிக்குளம், காக்கைக்குளம் எனும் இரு குளங்கள் மூலம் வடக்கில் பருத்தி, கரும்பு, கமுகு ஆகியனவும் தெற்கில் செந்நெல்லும் தழைத்தோங்கியது.

திருவருள் சித்தத்திற்கு அமைய தன் இல்லத்தில் கந்தனுக்கு குடிலொன்றை அமைத்து முதலியார் வழிபட்டார் என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். அவருக்கு மக்கள் நினைவுக்கல் நாட்டி வழிபட்ட இடமே இன்று இவ்வாலயத்துக்கு முன்னால் உள்ள 'முதலியாரடி' எனப்படும் சிறு ஆலயமாகும்.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு பின் அதே இடத்தில் 1661ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதே தற்போதைய இணுவில் கந்தசுவாமி ஆலயமாகும்.

பழங்குடிமகனான வேலாயுதரும், மனைவியும் முருகனிடத்தில் ஆராத அன்புடையவர்கள். அவர் ஒரு நாள் நித்திரையாக இருந்த பொழுது முருகப்பெருமான் கனவில் தோன்றி தான் காஞ்சியம்பதியில் இருந்து வருவதாகச் சொல்லி தனக்கு இல்லிடமொன்று அமைத்துத் தருமாறு கேட்டார். அதற்கு எங்கே அமைத்துத் தருவதென்று வேலாயுதர் வினவியதும் உமது வெற்றிலைத் தோட்டத்தில் 'நொச்சித்தடி' நாட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அமைக்கலாம் என்று கனவில் முருகப்பெருமான் கூறினார்.

மறுநாள் பொழுது புலர்ந்நது. என்ன அதிசயம்! வேலாயுதரின் வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி ஒன்று புதிதாய் நாட்டப்பட்டிருந்தது. கனவில் காட்சி தந்து இல்லிடம் கேட்டது முருகப்பெருமான் என்றே நம்பினார். முருகப்பெருமானின் திருக்குறிப்பை நிறைவேற்ற மனம் கொண்ட வேலாயுதர் தமது தோட்டத்தில் இருந்த மாட்டுக்குடிலை நொச்சித்தடி நடப்பட்டிருந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தார்.

இணுவில் கந்தசுவாமி கோவில் ஆரம்பத்தில் மாட்டுக் குடிலாய் இருந்து, செங்கற் கோவிலாய் மாறி, பின் வெள்ளைக் கற்கோவிலாக தோற்றம் பெற்றது. மொட்டைக் கோபுரம் மற்றும் மூன்று தளங்களை கொண்ட இராசகோபுரம் என இரு கோபுரங்களுக்கிடையே பெரியதொரு மண்டபமும் கொண்ட கோவிலை யாழ்பாணக் கிராமப் புறங்களில் காண்பது அரிது.

இவ்வாறான அமைப்பினையுடைய இந்த ஆலயத்தின் மீது இணுவைத் தவஞானியாகிய பெரிய சந்தியாசியாரின் கண்ணோட்டம் சென்றது. சுப்பிரமணியம் என்ற பிள்ளைப் பெயர் கொண்ட இத்தவஞானி இவ்வாலயத்திற்கு அழகியதொரு திருமஞ்சம் செய்து வைக்க விரும்பினார்.

முப்பத்தைந்து அடி உயரமான இந்த திரு மஞ்சத்திற்கு நான்கு சில்லும், மேலே ஐந்து கலசங்களும் பொருத்தப் பெற்றுள்ளன. இந்த அருமையான மஞ்சத்தில் வள்ளி, தெய்வயானை சமேதரமாக ஆறுமுக சுவாமி கொலுவிருந்து மகோற்சவத்தில் பன்னிரண்டாம் திருவிழாவன்றும், தைப்பூசத் திருநாளன்றும் திருவீதியில் ஊர்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்தை எட்டிப்பிடித்துள்ள இந்த மஞ்சத்தைப் போன்று ஒரு மஞ்சம் இலங்கையிலோ, இந்தியாவிலோ, வேறு எங்குமோ காணமுடியாது என தொல்பொருள் ஆராச்சியாளர் பலர் கூறியுள்ளார்கள்.

உலக பெருமஞ்சம் இது தான் என வரலாற்று அறிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். இந்த மஞ்சம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு, நன்கு பேணுவதற்காக நாற்பதடி உயரமான மஞ்சக் கொட்டகையும் நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளது.

பெரியவர் காலத்தில் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவன்று நொச்சியம் பதியில் இருந்து காரைக்கால் சிவன் கோவில் வரை ஐந்து தேர்கள் சென்று திருவீதிவலம் வந்து காட்சி அற்புதமானது.

ஓர் ஆலயத்தின் கீர்த்திக்கு அவ்வாலயத்தில் அமைந்துள்ள புண்ணிய தீர்த்தமும் விசேட சிறப்பைத் தருகின்றது. அந்த வகையில் இவ்வாலயத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள சாந்தியடி வயிரவர் சந்நிதியும் அதன் முன்பாகவுள்ள தீர்த்த கிணறும் மிக பிரசித்தமானவை.

நன்றி: பரிபாலனச்சபைத் தலைவர் எஸ். சோதிப்பெருமான்

Keine Kommentare:

Kommentar veröffentlichen